தற்போது அன்புக்குப் பதினான்கு வயது ஆகிறது. ஒன்பதாம் வகுப்பு படித்து
வருகிறான். ஜோதி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொள்வாள். கதிரேசன்
காலை வேளையில் வேலைக்குச் சென்றுவிடுவான். இரவுக்கு முன் வீட்டிற்குத்
திரும்பிவிடுவான். ஆனால் எவ்வாறு? கால்களின்
ஒவ்வொரு அடியும் இணையாக இல்லாமல், உடல் உறுதியாக
நில்லாது, தள்ளாடிக் கொண்டு
வீட்டிற்கு வருவான். சில நேரம், அன்பு
தேடிக்கொண்டு போவான் எங்காவது மயக்கம் அடைந்து கீழே விழுந்து கிடப்பாரோ என்று
அவ்வாறு இருக்கையில் அன்பு தன் அப்பாவைத் தாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து
சேர்ப்பான். கதிரேசனின் குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம். அவன்
குடித்துவிட்டால் அவன் வாய் அவன் பேச்சைக் கேட்காமல் அசைந்துகொண்டே இருக்கும்.
ஏதேதோ ஒன்றைப் பேசிக்கொண்டே இருப்பான். இதனால் ஜோதிக்கும், அன்புக்கும், இரவு தூக்கம் என்பது கதிரேசன் தூங்கிய
பின்புதான். சில சமயங்களில் கதிரேசனை அமைதிப்படுத்த வேறு வழியின்றி அன்பு எதையாவது
கொண்டு, அவரை அடித்துதான்
அமைதிப்படுத்துவான். இதெல்லாம் காணும்பொழுது ஜோதி தனியே மனதுக்குள் கண்ணீர் விட்டு
அழுவாள்.
மேலே கண்டவாறு கதிரேசன் குடிக்கு மோசமாக அடிமையாகிப் போனவன்தான் . ஆனால் அவன் இளம் வயதிலிருந்தே குடிக்கும் பழக்கம் கொண்டவன் அல்ல.நகரத்திற்கு வந்தடைந்தபின் கதிரேசனுக்கு எளிதாக வேலைவாய்ப்பு கிடைத்துவிடவில்லை. சில மாதகாலம் வேலை தேடுவதிலேயே காலத்தை செலவிட்டான். பிறகு எந்த வேலையும் கிடைக்காததால் ஆழ்ந்த சோகத்திற்கு உள்ளானான். பேசாமல் கிராமத்திலேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் பலமுறை அவன் நெஞ்சைக் கிழித்தது. இடைப்பட்ட இந்த காலங்களில் அவர்களின் அன்றாட செலவுகளுக்கு ஏற்கனவே கிராமத்தில் ஈட்டிச் சேர்த்த தொகை உதவியாக இருந்தது. முதலில் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட அன்பழகனை, ஓரிரு மாதங்களிலேயே அரசுப்பள்ளிக்கு மாற்றிவிட்டனர். ஜோதிக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் அவள் நகையை அடகு வைத்து தான் குடும்பத்தை வழி நடத்துவாள்.
இப்படியே ஆரம்பத்தில் பல சறுக்கல்களைக் கண்ட கதிரேசனுக்கு, ஒரு கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர் மூலம், ஒரு வேலை கிடைத்தது. அவர் மூலம் நால்வர் சேர்ந்த குழுவினுள் இவரும் ஒரு நிரந்தரக் கட்டிடத் தொழிலாளியின் உறுப்பினரானார், ஆதலால் எங்கு வேலை இருந்தாலும் அவர்களுடன் சென்றுவிடுவான். நல்ல வருவாயும் வர ஆரம்பித்தது கதிரேசனுக்கு. இருப்பினும் வேலை முடித்து, திரும்பும்போது அவனது நண்பர்கள் மதுக்கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதுதான் பழக்கம். அப்பொழுதெல்லாம் சிறு தொகையை அவர்களுக்குக் கைமாற்றாகக் கொடுத்துவிடுவான். மீதித் தொகையைத் தான் ஜோதியிடம் தருவான். என்னதான் அவன் நண்பர்களுக்குத் தொகை தந்தாலும், நெருங்கிப் பழகினாலும் மதுவைத் தொடாமல்தான் சில காலம் இருந்தான். காலப்போக்கில் வேலைப்பளு அதிகரிக்கத் தன் நண்பர்களோ இதுவும் மருந்துதான் எனச் சொல்லி, இவனும் வலி தெரியாமல் இருப்பதற்குக் குடிப்பழக்கத்தைத் தொடங்கினான். அதுதான் தற்பொழுது குடியேப் பழக்கம் என ஆகிவிட்டது.
அன்றாடம் மதுக்கடைக்குச் சென்று குடிப்பது போல் இன்றைக்கும் வேலை முடிந்து
நண்பர்களுடன் சென்றான். எப்பொழுதும் போல் அவர்களுக்குப் பொழுதுபோக ஊர்க்கதையினை
எடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருவன் என்னங்கடா! இன்னைக்கு நியூஸ்
பேப்பர் யாராச்சும் படிச்சீங்களா ? நான் ஒன்று
பார்த்தேன். காஞ்சிபுரத்தில் ஒரு ஊரில் ஒருத்தனோட பொண்டாட்டி அவளோட கள்ளக்காதலன்
கூட சேர்ந்து, அவரைக்
கொல்லப் பார்க்க அடித்துப் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்களாம், இவன் இப்ப போய் பொண்டாட்டியை
கண்டுபிடிக்கும்படி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கானாம் என்று சொல்லி முடித்தான்.
இன்னொருவன் அதற்கு, அப்படி என்னடா
நடந்திருக்கும்? இவனை விட்டு
இன்னொருவனுடன் போயிருக்கா அவ ஒருவேளை அதில் ஏதாச்சும் பிரச்னையோ? எனச் சொல்லி சிரித்தான். அனைவரும்
சிரித்தார்கள். அதற்கு இவன் அப்படியெல்லாம் இல்லை. என்ன காரணம்னா அவ புருஷன்
டெய்லி குடிச்சிட்டு வருவானாம், ஒழுங்கா
வீட்டுக்கு சம்பாதிச்சும் போடுறதில்லையாம் அதுவும் இல்லாம அந்தப் பொண்ணை அடிக்கடி
அடிச்சிடுவானாம், ஒருநாள்
ரெண்டுநாள்னா பரவாயில்லை இந்தக் கூத்து ரொம்ப வருடமா இருந்திருக்கு, அதான் இவனைப் பிடிக்காம போய் வேற துணையை
பார்த்துட்டு போயிட்டானு போலீஸ் விசாரணையில் சொல்லியிருக்கானு நியூஸ் பேப்பர்ல
போட்டிருந்தது என சொல்லி முடித்தான். இதைக் கேட்டதும் ஒவ்வொருவருக்கும் சிறிதாக
தங்கள் நிலையை நினைத்து அடிவயிறு கலங்கியது. இருந்தாலும் வெவ்வேறு கதைகளைப்
பேசிக்கொண்டு அவரவர் வீடுகளுக்கு அனைவரும் திரும்பினர். கதிரேசனும் வீட்டிற்கு
வந்தடைந்தான்.
0 Comments