அன்று ஒரு நாள்
மாலை நேரம் மாநகரம் வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. பரபரப்பாக வாகனங்கள்
சாலையில் விரைந்துகொண்டிருந்தன. அதில் ஒரு ஆட்டோவும் சென்றது. மூன்று பயணிகளை
ஏற்றி ஆட்டோ ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார். ஓட்டுநர் தனது செல்லில், ஹெட்ஃபோனின் உதவியால் பாட்டைக் கேட்டுக்கொண்டு ஆட்டோவை இயக்கினார்.
மூவரில் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் தன் காதலியிடம் ஏற்கனவே நடந்து முடிந்த சண்டைக்கு
மன்னிப்பு கேட்டும் சமாதானமும் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். மற்றொரு பயணி
ஒரு இளம்வயது பெண். மனதில் உள்ள கடின எண்ணங்களையும், கவலைகளையும்
மறக்க இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை தள்ளிக்கொண்டிருந்தார். தன் நண்பர்கள் நம் வயதே
இருந்தாலும் நான் அவர்களை விட வயது முதிர்ந்த பெண்மணி போல தோற்றம் அளிக்கிறேனோ
என்ற குழப்பம் அவளை செல்போனில் நேரத்தை செலவிடத் தூண்டியது. மூன்றாவதாகப் பயணம்
செய்தவர் ஒரு பாலகன். அம்மா கடைக்குச் சென்று வரச் சொல்ல, கடையில்
வேலையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.
நேரம் செல்லச் செல்ல ஆட்டோவின் வேகம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. சாலையில் சிகப்பு சிக்னல் போடப்பட்டது. முதல் நபர் இன்றும் தனது மன்னிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அப்பக்கத்திலிருந்து அசைவு ஏதும் வரவில்லை. மாறாக கடுமையான சொற்கள் தான் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. இளம் வயதுப் பெண்ணின் செல்போனில் சார்ஜ் குறைந்துவிட்டதால் அவர் செல்போனை நிறுத்திவிட்டு, தனது பைக்குள் வைத்துவிட்டார். சிறு பையனோ ஆட்டோவில் ஏறியதிலிருந்து விளையாடிய எந்தப் போட்டியையும் வெல்லவில்லை. தோல்வியையே சந்தித்தான். முதல்முறை வெற்றி விளிம்பிற்கு வந்தான். அந்த நேரத்தில் திடீரென அம்மாவிடம் இருந்து அழைப்பு வர செல்போன் தானாக கேமிலிருந்து வெளியேறியது. இவனும் அந்த அழைப்பை எடுத்து "கொஞ்சம் நேரத்தில் கால் பண்றேன்மா" என சொல்லிவைத்துவிட்டு மீண்டும் அவசரமாக கேமிற்குள் நுழைந்தான். ஆனால், நெட்வொர்க் உடனே கிடைக்காததால் உள்ளே செல்லும் முன்னரே தோல்வியே என அறிந்துகொண்டு அந்தக் கோபத்தில் அம்மாவுக்கு மீண்டும் கால் செய்து 'ஏன்மா? தினமும் வர நேரமாகிறது. அப்புறம் என்ன கால்?' என்று கடிந்துகொண்டு துண்டித்துவிட்டான். மீண்டும் தோல்வியை சந்திக்க விரும்பாதவன் செல்போனை அணைத்துவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டான். அப்பொழுதுதான் அவனுக்கு 'பக்கத்து வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்காமல் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்' என்று உணர்ந்தான்.
வாகனங்களின் ஹாரன் சத்தங்கள் தலைவலியையும் எரிச்சலையும் அப்பெண்ணுக்கும், அந்தச் சிறுவனுக்கும் தந்தன. முதலாம் நபர் அவரது வாதங்களை முன் வைத்துக் கொண்டிருக்கும்போதே, காதலி அங்கே, "உன்னிடம் பேசுவதே வீண். எனக்கு இப்பொழுது உன்னிடம் பேச விருப்பமில்லை" எனக் கூறி, போனை அணைத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள். இங்கு இவரோ அதைத் தாங்க இயலாமல் சோகத்தோடு அமைதி நிலைக்குச் சென்றார். அச்சோகம் அவர் காதுகளுக்கு எவ்வித சத்தங்களையும் கேட்கும் திறனையும் சற்றே நிறுத்தி வைத்தது. "அவள் என்னைப் புரிந்துகொள்ளவில்லையே," என்று மனவருத்தத்தில் மூழ்கினார்.
வெகுநேரமாகப் போடப்பட்டிருந்த சிக்னலும் பின் எடுக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் நகர ஆரம்பித்தன. ஆட்டோவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. மூவரும் தங்களுடைய செல்போன்களிலிருந்து விலகி வெளியே பார்த்துக்கொண்டே வந்தனர். சில தூரம் சென்றபின் ஆட்டோ ஒரு வளைவில் திரும்ப வேண்டியிருந்தது. அங்கு அவ்வளவாக வாகனங்கள் எளிதில் சென்றும் திரும்புவதும் எளிதல்ல. ஒரு நேரத்தில் ஒரு வழியாக ஒரு வாகனம் வரமுடியும். சிறிது நேரம் கழித்து மறுபுறத்திலிருந்து வாகனம் நகரும். அவ்வாறு நகர்வதற்காக ஆட்டோ காத்துக்கொண்டிருந்தது. அவ்வேளையில் ஆட்டோவில் உள்ள அனைவரும் அவர்களது இடப்பக்கத்தில் தங்கள் பார்வையினை செலுத்தினர். அங்கே நடைமேடையின் துணியிலான கூடாரங்கள் சில இருந்தன. அங்கே ஒரு கூடாரத்தில் ஒரு தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தைக்கு உணவு அளிக்க சாலையில் ஓடும் வாகனங்களைக் கைகாட்டி குழந்தையை உண்ண வைத்தாள். அத்தாயின் செயலைப் பார்த்த சிறுவன், என் சிறுவயதிலும் எனக்கு இவ்வாறுதானே அன்னை ஆசை ஆசையாக உணவளித்திருப்பாள் எனப் பூரித்துக்கொண்டான். மற்றொரு கூடாரத்தின் வெளியே நான்கு சிறுமிகள் அங்கிங்கு கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த போதும் அவர்கள் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். எந்த வித தாழ்வு மனப்பான்மையும் இன்றி, அவர்கள் தங்கள் வாழ்வினை மகிழ்ச்சியுடன் கழிப்பதைக் கண்ட இளம்வயது பெண் பெரிதாக, ஏதுமில்லையெனினும் அவர்கள் சந்தோஷத்தை மறந்துவிடவில்லை. ஆனால், நான் இங்கு இத்தனை இருந்தும் இல்லாத ஒன்றினையும், மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தும் வாடுகிறேன் என உணர ஆரம்பித்தாள்.
முதல் நபரின்
பார்வை அங்கே வெளியே அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு தம்பதியை நோக்கி
இருந்தது. அவர்கள், இருவரும் உணவுக்குத் தேவையான வேலைகளைச்
செய்துகொண்டிருந்தனர். அவருக்கு அந்நேரத்தில் நேற்றைய சண்டை நினைவுக்கு வந்தது.
அவளிடம் நான் அவ்வாறு பேசியிருத்தல் தவறு என்று தனக்குத்தானே மனதில்
நினைத்துக்கொண்டார். இச்சிறு கூடாரத்தினுள் தானே இவர்கள் தங்கி வாழ்கின்றனர்.
இருந்தும் இவர்களிடையேயான அன்பு குறையாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால்,
நான் பெரிய வீடுதான் நன்றாக இருக்கும், வசதியோடு
வாழ்வதுதான் வாழ்க்கை அதற்காக நான் வீடும் பார்த்துவிட்டு அவளிடம் சென்று சிறு
கர்வத்துடன் கூறினேன். அதற்கு அவள் "ஏன்? இப்பொழுது
இருக்கும் வீடு நன்றாகத்தானே உள்ளது நீ பெரிதாக யோசிப்பது சரிதான் ஆனால் இப்பொழுது
அதற்கு அவசியமில்லை சிறியதாக இருந்தால் என்ன அதெல்லாம்?" எனச் சொன்னாள். அதுதான் வாக்குவாதம் ஆகி சண்டையாக நிற்கிறது, மேலும் அவளிடம் தெரிவிக்காமல் கடன் வாங்கியதும் தவறுதான் எனத் தான்
புரிந்துகொள்ளவில்லையே என்று நினைத்தார். எதனால் சண்டை வர நேர்ந்தது எனப்
புரிந்துகொண்டார். மேலும், தான் நினைத்ததுபோல் சொர்க்கம் இடத்தையோ,
மரியாதையையோ சார்ந்து இல்லை, அவளுடன் இணைந்து
இரவு கழிப்பதே சொர்க்கம்" என்று நினைக்கையிலேயே ஆட்டோ புறப்பட்டுச் சென்றது.
பயணம் மீண்டும் தொடங்கியது.
“பயணம் முடிந்தபோதும், அந்த
சுவாசத்தில் ஒரு மாறுபாடு இருந்தது — அவர்கள் வந்தது வேறு, சென்றது வேறு.”
2 Comments
Beautifully written. Can feel each and every line . Keep writing 👍🏻
ReplyDeleteThanks ka
Delete