அருள் நினைத்தது போல் மழை நிற்பதாகத்
தெரியவில்லை. மழை பெய்தது, பெய்து கொண்டேதான் இருந்தது. குறைந்தும் மறுபடியும் வேகம் கூடி மழை
நிற்காமல் பெய்து கொண்டேதான் இருந்தது. இப்படி இருக்க, அங்கு
ஊரில் ஜீவா ராமுவையும் நம்முடனே அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி
செய்திருந்தால் நான் இப்பொழுது ராமுவை நினைத்து வருந்திக் கொண்டிருக்கத்
தேவையில்லை என நினைத்துத் துக்கப்பட்டான். இரண்டாவது நாளும் கழிந்தது.
சிகரெட்டுகள் காலி. உண்பதற்கும் குடிப்பதற்கும் ஒன்றும் இல்லாமல் அருள்
வாடிக்கொண்டிருந்தான். அதேசமயம் ராமு தன் தாகத்தைப் போக்குவதற்காக நாவினை நீட்டிக்
கொண்டு ஓடும் நீரினைக் குடித்துக் கொண்டிருக்கும்போது அதைப் பார்த்த அருள், அந்த
நீரைத் தான் குடிக்க வேண்டும் போல என்ற எண்ணமும் ஆனால் எப்படி குடிப்பது என்ற
தயக்கமும் அவனுக்குள் இருந்தது.
இருந்த சிகரெட்டுகள் தீர்ந்துவிட்டன.
கொஞ்சம் கருணை காட்டுங்களேன். ஒதுங்க இடம் இல்லை. இப்ப சாப்பிடுவதற்கு, சாப்பிடுகிற
மாதிரி எதுவும் இல்லை. என்னை ஏன் இப்படி கொடுமை பண்றீங்க? இறைவா, இந்த
வாயில்லா ஜீவன் என்ன பண்ணுச்சு? அதுக்கு ஏன் இந்த கொடுமை? என கடவுளைப் பார்த்து வினவினான் அருள்.
ஒருபுறம் அருளுக்குப் பசி விரட்டியது. தனக்கு ஏதாவது கிடைக்குமா என்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி வெளியே பார்த்துக்கொண்டிருக்கையில் நீரில் ஒரு
வாட்டர் கேன் மிதந்து வருவதைக் கண்டான். மேலும் அந்த வாட்டர் கேன் அவனை நோக்கியே
மிதந்து கொண்டு வந்திருந்தது. அதனைத் தனது ஊன்றுகோலால் பிடித்து எடுத்துக்
கொண்டான் அருள். அந்த வாட்டர் கேனைப் பேருந்துக்குள் ஒரு முனையில் நீர்
ஒழுகிக்கொண்டிருக்கும் இடத்தில் சென்று வைத்தான். சொட்டு சொட்டாக சரியாக நீர்
விழும் இடத்தில் வாட்டர் கேனைப் பொருத்தினான் அருள். அந்த வாட்டர் கேன் முழுவதும்
நிரம்பும் வரை அதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். மேலும் தண்ணீர்
நிரம்பியதும் குடித்துவிட்டு மீதம் இருப்பதை ராமுக்கு அளித்தான். அந்நாள் அவ்வாறே
கழிந்தது, இரவும் வந்தது. ராமு எப்பொபழுதும்போல் அருளின் மேல் சாய்ந்தவாறு
தூங்கியது.
அடுத்த நாளும் விடிந்தது. ஆனால் மழை
பெய்வதை நிறுத்தவில்லை. அருளின் கெட்ட நேரமோ தெரியவில்லை, அந்த
வாட்டர் கேன் காற்றினால் பேருந்தின் வெளியே சென்று விழுந்தது. மேலும் ராமுவுக்கும்
காய்ச்சல் வர ஆரம்பித்தது. இருப்பினும் இருவரும் கீழே ஓடும் தண்ணீரை குடித்து
பசியினை அடக்கிக் கொண்டு அந்நாளைக் கழித்தனர். இது இப்படியே 2 நாள்கள் நடந்தது.
இவ்விரண்டு நாட்களில் அருள் மற்றும் ராமுவுக்கு வாந்திகளும், ஏப்பங்களும்
வந்த வண்ணமாகவே இருந்தது. ஆனால் மறுநாளும் விடிந்த பின் படுத்த படுக்கையில் இருந்த
ராமு நாக்கினை வெளியே தொங்கவிட்டபடி படுத்துக் கொண்டிருந்தான். அருளுக்கும்
எழுந்து நடக்க சக்தியே இல்லை. பசியின் மயக்கத்தினால் கண்கள் மங்கியபடியே கிடந்தான்
அருள். சிறுவயதிலிருந்தே ராமுவை தூக்கி வளர்த்த அருள், ராமுவைப்
பார்த்து, "யாரும் இல்லாத நான் தனியாக இருந்தபோது நீ என் கூடவே இருந்தடா. இந்த
நேரத்திலேயும் எனக்கு நீதான் துணையாய் இருக்கிறாய். நீ மட்டும் இல்லையென்றால், நான்
இங்கு யாருக்காக வாழ்கிறேனென்று நினைத்து தற்கொலை செய்து செத்துக்கூட
போயிருப்பேன். ஆனால் பசி உன்னை அடித்து சாப்பிடச் சொல்லுது" என பேசிக்கொண்டே
ராமுவின் அருகே வந்து ராமுவின் தாடையைப் பிடித்து ஓவென்று கதறி அழுதான் அருள்.
அன்றைய நாளில் ஜீவா தொலைக்காட்சியின்
செய்தியைக் காணும்பொழுது வானிலை ஆய்வு மையம் மழையானது இன்று மதியம்
நின்றுவிடக்கூடும் என்றும், நாளை முதல் மழை வர வாய்ப்பு இல்லை என்றும் அறிவித்ததனைக் கண்டான்.
அதனைக் கண்ட ஜீவாவுக்கு ஒரே சந்தோஷம். மேலும், ஜீவாவின் அப்பா, "நாளை
தயாராக இரு. நாம் நாளைக்கு ஊருக்குச் செல்ல இருக்கிறோம்" எனவும் கூறினார்.
"நாளைக்கு என்றால்?" என ஜீவா அப்பாவைக் கேட்டான். "இன்று இரவு கிளம்பிவிடுவோம். நாளை
நாம் நமது ஊரில் இருப்போம்" என ஜீவாவின் அப்பா ஜீவாவிடம் கூறினார்.
இங்கு ராமுவிடம் அழுது கொண்டிருந்த
அருள் அப்படியே மயக்கமடைந்தான். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அருள், என்ன
செய்வது என்று தெரியாமல் திகைத்தான். ராமுவின் உடல் பரிதாபமான நிலையில் கிடந்தது.
பசி அவனை வாட்டி எடுத்தது. பின் மெல்ல மெல்ல எழுந்த அருள், தனது
ஊன்றுகோலில் இருந்த இரும்புப் பகுதியினைப் பேருந்தில் தேய்த்துக் கூர்மையாக்கத்
திட்டமிட்டான். அதன்படியே நன்றாகக் கூர்மையாகவும் தீட்டினான். மேலும் பின்பு
அவனிடமிருந்த போர்வையினைப் பாதியாகக் கிழித்தான். அப்பேருந்தில் இருக்கும்
காகிதங்கள், டிக்கெட்டுகள் அனைத்தையும் ஒன்றாகக் கூட்டினான். தீப்பெட்டியினையும்
ஒருமுறை சரிபார்த்துக்கொண்டான்.
கூர்மைப்படுத்திய கருவியை
எடுத்துக்கொண்டு ராமுவின் அருகே வந்து அமர்ந்தான் அருள். ராமுவிடம் "என்னை
மன்னிச்சிருடா, இதை விட்டால் வேறு வழி எனக்குத் தெரியவில்லை" எனக் கருவியை
ஓங்கினான் அருள்.
அடுத்த நாள் காலை வந்தது. ஊரிலிருந்த
அனைவரும் மழை என்னவெல்லாம் பண்ணியிருக்கிறது என்று பார்க்கப் புறப்பட்டனர். கடைகள்
திறக்கப்பட்டன. பேருந்து ஓட்டுநர்களும் அவரவர் வேலைகளுக்குச் செல்லக் கிளம்பினர்.
அருள் தங்கியிருந்த பேருந்து ஓட்டுநர் அவரது பேருந்தின் நிலையைப் பார்க்க வந்தார்.
மழை வெள்ளம் பேருந்து நிலையத்தில் பாதி வடிந்திருந்தது. பேருந்தின் உள்ளே சென்று
பார்த்தவருக்குப் பேரதிர்ச்சி! உடனே ஆம்புலன்ஸுக்குக் கால் செய்தார். ஆம்புலன்ஸும்
வந்து சென்றுவிட்டது.
ஜீவா அன்று மாலை அப்பாவிடம், "அப்பா, அப்பா, வாப்பா, நாம
பஸ் ஸ்டாண்ட் போய் டீ குடிச்சிட்டு வரலாம். நான் அப்படியே ராமு எப்படி இருக்குன்னு
பார்க்கணும்" என்று அடம்பிடித்தான். அவனது அப்பாவும், "சரி
வாடா, போலாம்" எனக் கிளம்பினார். காலையில் இருந்ததை விட வெள்ளம்
தற்போது நன்றாகவே குறைந்திருந்தது. தேநீர்க் கடைக்கு வந்ததும், ஜீவாவின்
அப்பா இருவருக்கும் தேநீர் வாங்கிவிட்டு, அங்கு உள்ளவர்களிடம் நலம்
விசாரித்துக்கொண்டிருந்தார். ஜீவா பிஸ்கட்டை வாங்கிக்கொண்டு ராமுவைத் தேடினான்.
"ராமு, ராமு" எனக் கூப்பிட்டான். ஆனால் ராமு வரவில்லை. நடந்து சென்று
தேடலாம் என பார்த்தான், ஆனால் அப்பா,
"ஜீவா, தண்ணில இறங்காத" என அதட்டினார்.
பயந்து போய் அப்படியே நின்றுவிட்டான். அதைப் பார்த்த டீக்கடைக்காரர், "என்னப்பா
தம்பி, அந்த பிரவுன் கலர் நாயை தேடுறியா?" எனக் கேட்டார். "ஆமா அங்கிள், நீங்க
பார்த்தீங்களா? உங்களுக்கு எங்க இருக்குன்னு தெரியுமா?" என ஆவலுடன் கேட்டான் ஜீவா.
"ஆமாப்பா, அதோ அங்க ஒரு பஸ் இருக்கு பார்த்தியா? அதுக்கிட்டதான் தூங்கிட்டு இருக்கு.
போய் பாரு" என டீக்கடைக்காரர் சொன்னார்.
உடனே மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை
நோக்கி ஓடினான் ஜீவா. அங்கு ஜீவா ராமுவைப் பார்த்தான் . ராமுவைக்
கண்டதும் ஜீவாவின் கால்கள் தரையில் நிற்கவில்லை,மிகுந்த ஆனந்தத்துடன் ராமுவுக்கு
பிஸ்கட்டுகளைப் போட்டு மகிழ்ந்தான்.உங்கள் கேள்வி புரிகிறது. அப்ப அருள் என்ன
ஆனார்?அதானே? ராமு
உயிரோடு இருக்கிறது என்றால் அவருக்கு என்ன ஆனது? வாருங்கள் பார்ப்போம்..
ராமுவிடம் "என்னை மன்னிச்சிருடா, இதை
விட்டால் வேறு வழி எனக்குத் தெரியவில்லை" எனக் கருவியை ஓங்கினான்
அருள்.ஓங்கியவன் கைகள் நடுங்கியவாறு தனது இடதுகையின் முட்டிக்கு கீழ் வரை உள்ள
பாகத்தை சட்டடென்ன்று அறுத்து எடுத்தான்.அறுத்ததும் போர்வையின் ஒரு பாதியை வைத்து
இரத்தம் வழியும் இடத்தினை இறுக்கிக் கட்டினான்.பிறகு சேகரித்து வைத்த பொருட்கள்
மற்றும் போர்வை துணியினையும் சேர்த்து தீ மூட்டினான்.அந்த அறுந்த கையை நெருப்பில்
காட்டி நன்றாக அது கருகியதும் அதை ராமுவுக்கு பாசமாக ஊட்டினான்.பின் அவனும் உண்டு
அத்தனை நாள் பசிக்கு பசியாற்றினான்.அந்த வலியிலும் பசி குறைந்தது மற்றும் ராமுவை
உண்ண வைத்தது ஆகியவற்றை நினைத்து மிகவும் நிறைவாக உணர்ந்தான்.
ஆமாம் ஆம்புலன்ஸ் அன்று காலை
அருளைத்தான் ஏற்றிச் சென்றது.அருள் மருத்துவமனையில் பெரிய போராட்டத்திற்குப் பின்
காப்பாற்றப்பட்டான்.அருளின் செயலை அறிந்த அரசாங்கம் அவனுக்கு அப்பேருந்து
நிலையத்திலேயே ஒரு கடையினையும் அதையே ஒரு வீடு போன்றும் அமைத்துக்கொடுத்தது.
நண்பர்களே நீங்கள் அருளாக
இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
1)அருள் செய்தபடி
2)ராமுவைக் கொன்று அதனை உட்கொள்வது
3)இதுதான் விதி என்று பசியினால்
நீங்களும் ராமுவுடன் சேர்ந்து மறைந்து போவது..
என்பதை கமென்ட் செய்யவும்.
-நந்தகோபால்
0 Comments