Ad Code

Responsive Advertisement

கவிதைத் தொகுப்பு-3

 

நீர் வறட்சி

 

வான் பார்த்தே இருந்த                                         


விழிகளும் பொய்த்தது

வானம் பொய்த்தது

போல

இடம்,பொருள்:

மழை பெய்யாததாலும், நீர் நிலைகளில் நீர் இல்லாததாலும் வானத்தை பார்த்தபடியே கண்ணீர் வடித்த மக்கள் தன் கண்ணீரையும் தீர்த்து விட்டனர். வானத்தில் மழை தரும் மேகங்கள் இல்லாமல் பொய்த்தது போன்று மக்களின் கண்ணில் நீர் இல்லாமல்  கண்ணீரும் பொய்த்தது.


ஒரு மாலைப் பொழுது

 

தொலைவில் தெரியும் மலை முகடுகள்

பென்சிலில் தீட்டப்பட்ட வரை கோடுகள்

அருகில் இருக்கும் கட்டிடங்கள்

அண்ணாந்து பார்க்கும் மாமலைகள்!

 

ஆகாயத்தில் பறவைகள் திரும்புகிறது

அவைகளின் வீட்டை நோக்கி

அடுக்குமாடிகள் ஆங்காங்கே கட்டி விட்டோம்

அவைகளுக்கு வேக தடை ஆக்கி!


செந்நிறத்தை கருமை சூழும்

நேரம் அது

ஊர்கள் யாவும் மூடுபடியால் மூழ்குவது

போல காட்சியளித்தது

மூடியது பனி அல்ல வாகனங்களின் புகை!

 

நடந்து செல்கையில் உடலை

தழுவி செல்கிறது காற்று

மரங்களில் இருந்து  அல்ல

மனிதன் படைத்த வாகனங்களில் இருந்து!

இடம்,பொருள்:

மாலை நேர நகர  வாழ்க்கையின் காட்சி.

 

போக்குவரத்து

 

அணிவகுத்து செல்லும்

மகிழுந்துகள் பேருந்துகள்

இவற்றின் நடுவே

இருசக்கர வாகனங்கள்

சாலையினை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன

எந்நேரமும்!

 

காதல் பாடல்

(ஆண்):

 கேளடி கேளடி

 உன் காதலன் இசைப்பாட்டு

 கூறடி கூறடி

 ஒரு சொல் கண் பார்த்து

 

 கோபம் கொண்டு நீயும் போனால்

 இன்னிசை கேட்டால் சுவைக்குமா?

 நெடுந்தூரம் நீயும் போனால்

 காதல் தூரம் போகுமா?

 

 பல நாள் இருப்பேன்

 குற்றம் கொண்டு நான்

 ஒரு நாள் இரேன்

 உன்னுடன் பேசாமல் நான்

 

 புல்லாங்குழல் இசைத்திடுவேன் ஒன்றாகவே

 ஊதும் மூச்சாக மாறுவேன் மௌனம் போக்கவே

 கண்ணன் போல் இல்லையேனும்

 கற்று இசைக்கு இணைந்து விடுவேன்

 

 மறுபடியும் நீயும் போன

 மறுகணம் நானும்

  எப்படி தான் இருக்கும்

 

 மனதோடு பற்றிக் கொள்ளும் இந்த ஞாபகம்

 மனு வந்து சேர்ந்ததா என்ன தாமதம்?

 

  (கேளடி கேளடி

  ...  கண் பார்த்து)

 

(பெண்):

 கேளடா கேளடா

 உன் பாவையின் இசைப்பாட்டு

 கூறடா கூறடா

 செல்வேனோ உன்னை விட்டு

 

 நதி பாதை மாறலாம்

 நானும் தடம் மாறலாம்

 கடல் போல் உன்னை நான்

 சேராமல் விடுவேனோ?

 

 உன் மீது கோபம் கொண்டு

 எங்கு நான் சென்றிடுவேன்

 இங்குதான் வந்திடுவேன்

 உனக்கு தண்டனை தந்திடுவேன்

 

 பல நாள் கண்ட கனவு

 ஒரு சண்டையில் அழியுமா?

 பல ஜென்மம் எடுத்தோம்

 இப்படி பிரிந்து போகவா?

 

 இலையுதிர் காலமும் போகும்

 வசந்தமும் ஒரு நாள் கூடும்!

 

 என்னைக் கொண்டு இன்ப வீணை

 நீயும் மீட்ட,

 அன்பு ராகம் நானும் பாட

 போதுமே போதுமே  நம்மை சேர்க்குமே!


  ( கேளடா கேளடா

  …செல்வேனோ உன்னை விட்டு)

 

(ஆண்):

 வேற எதுவும் பெரிதில்லை

 பேரின்பம் என் முன்னால் நின்றால்

 இந்த இன்பம் போதுமே

 இந்த ஜென்ம பலன் தீருமே!

 

(ஆண்&பெண்):

 பாடுவோம் பாடுவோம் நம்

 குரலுடன் சுவை கலந்து

 மீட்டுவோம் மீட்டுவோம்

 காதல் ராகத்தை ஒன்றிணைத்து    …(2)

இடம்,பொருள்:

காதலன் காதலி சண்டையிட்டு பின் இருவரும் இணைவதற்காக பாடும் பாடல்.

                                                                                                                              -கோ.நந்தகோபால்

Post a Comment

0 Comments

Close Menu