Ad Code

Responsive Advertisement

அருளும் ராமுவும்-பாகம் 1


அந்நகரம் எழில் மிக்க காட்சிகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. மேலும், பொருளாதார வளர்ச்சியினையும் தொழில் வளர்ச்சியையும் பன்மடங்கு பெருக்கியிருந்தது. ஊரெங்கும் பெரிய பெரிய தொழில் கட்டிடங்கள், மாபெரும் கோவில்கள், அழகுமிக்க பூங்காக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என எதிலும் குறை இல்லாத அளவு மாநகரத்தின் பெயருக்கு ஏற்றவாறு ஆடம்பரமாகக் காட்சியளித்தது. நகரத்தின் அக்காலம் மழைக்காலம் தொடங்கும் காலமாக இருந்தது. புரட்டாசி பிறந்து முடிந்து ஐப்பசி அடியெடுத்து வரக் காத்திருந்தது. அந்த நேரத்தில் வானில் தோன்றும் மேகங்களின் கூட்டம், நகரத்தின் எழிலுக்கு மேலும் வண்ணம் சேர்த்தது. அத்தனை பெரிய ஆடம்பரக் கட்டிடங்கள், மாடிக் குடியிருப்புகள் இருப்பினும், அருளுக்கு ஆங்காங்கே கிடைக்கும் நிழல்களும், கட்டுமானத்தில் இருக்கும் கட்டிட மேம்பாடுகளும், கடைகளின் வாசல்களும், பாலங்களின் அடிப்பகுதிகளும் அவன் வாழ்வை வசிக்கப் போதுமானதாக இருந்தன. வியாபாரத்தில் நட்டமாகி விபத்தில் சிக்கி வலது காலை இழந்தவனுக்கு, அத்தகைய இடங்களில் வசிப்பது மனதிற்கு நிறைவாகவே இருந்தது.

 

ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவன்தான் அருள். தனது அன்றாட வாழ்க்கை தேவைக்காகத் தெருக்களிலும் சாலைகளிலும் பிளாஸ்டிக்குகள், பாட்டில்கள் எடுத்துக்கொண்டு பழைய பொருட்கள் வாங்கும் கடைகளில் விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொள்வான். கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வான். அருளுக்கு எந்நாளும் தான் யாரிடமும் கையேந்திப் பிழைக்கக் கூடாது மற்றும் பிறரை ஏமாற்றக் கூடாது என்ற வைராக்கியம் முழுவதுமாக இருந்தது. பலகாலமாக இப்படி வேலை செய்பவனுக்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு ஓர் இடமும் இருந்துவிடவில்லை. ஆகையாலே ஒரு வலுவான நட்பு வட்டாரமும் கிடைக்கவில்லை. இவ்வாறு தனக்கென ஒருவரும் இல்லாத குறையை எண்ணியவன், ஒருநாள் தெருக்களில் இருந்த பிளாஸ்டிக்குகள் மற்றும் காகிதங்கள் எடுக்கச் சென்றவன் அங்கிருந்த நாய்க்குட்டிகளுள் ஒன்றினைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். நாய்க்குட்டிக்கு முதலில் அவன் பெயர் வைத்துவிடவில்லை. மாறாக அந்த நாய் தன்னுடன் இருந்துவிட்டால் போதும் என்றே நினைத்தான். பழகப் பழக அவனுடன் நன்றாக அந்தக் குட்டிநாய் ஒட்டிக்கொண்டது.

 

அதிலிருந்து அந்த நாயும், அருளும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள் வருவார்கள். பின்னர் அந்நாய்க்கு ராமு என்ற பெயரும் இட்டான். இப்படியெல்லாம் இருக்க, ஏற்கனவே தங்கியிருந்த இடத்திலிருந்து மூன்று மாதம் முன்னர் தற்போது வசித்து வரும் பேருந்து நிறுத்தத்திற்கு குடியேறினான். பேருந்து நிலையத்தை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டான். அங்கேயே பேருந்துகளைத் துடைத்துக் கொண்டும், பேருந்து நிற்கும் இடத்தைப் பெருக்கிக் கொண்டும், சுத்தம் செய்து கொண்டும், தனக்குத் தேவையானதை ஈட்டிக்கொண்டான். கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தானும் உண்டு ராமுவிற்கும் உணவளித்து வளர்த்து வந்தான். ராமு மிகவும் பார்க்க அழகாக, வாலை ஆட்டிக்கொண்டு உணவளிப்பவர்களைச் சுற்றும் பழக்கமும் கொண்டிருந்தது. அதே பேருந்து நிலையத்திற்கு 10 வயதான ஜீவா தனது அப்பாவுடன் தேநீர் அருந்துவதற்காக காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் வருவான். தினமும் அவ்வாறு தேநீர் அருந்த வருவதால் ஜீவாவின் அப்பாவிற்கு அங்கு நட்பு வட்டாரம் சற்றே பெருகியது. அவர்கள் என்றைக்கும் காலை மாலை தேநீர் அருந்த வருவதை நிறுத்தியது இல்லை. அவ்வாறு வரும்பொழுதெல்லாம் ஜீவா ராமுவிற்கு பிஸ்கட் துண்டுகளைப் போட்டு மகிழ்வான். ஜீவாவின் கால்களைச் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டு ராமுவும் விளையாடுவான், அதைப் பார்க்கும் பொழுது, "அடேய், பரவாயில்லைடா நான் ஒண்டிக்கட்டனு உன்னைக் கூப்பிட்டு வந்தா, நீ இங்க வந்து நிறைய பேரை சொந்தம் பிடிச்சிட்ட" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு சிரித்தான் அருள்.

 

ஜீவாவின் அப்பாவுக்கு வேலை இருந்தாலும், ஜீவா ராமுவைப் பார்க்க வேண்டும் என்றபடி அடம் பிடித்து, தன் அப்பாவைத் தேநீர் அருந்த கூட்டிக்கொண்டு வந்துவிடுவான். மேலும் அருளுக்கு இதுவரை தங்கிய வாழிடத்தை விட, இந்தப் பேருந்து நிலையம் மிகவும் நெருக்கமாக மகிழ்ச்சிக்குக் காரணமாகவும் இருந்தது. அத்தகைய மகிழ்ச்சி நீடித்துவிடவில்லை இச்செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் பரவும் வரை. பரப்பப்பட்ட செய்தி என்னவென்றால், "எச்சரிக்கை! எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் இதுவரை காணாத மழை பொழிய இருக்கிறது என்றும், ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாகவும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்" என்று அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது. இதைக் கேட்டதும், நகரத்தில் உள்ள அனைவரும் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அங்காடிக்குச் சென்று வாங்கி வைத்துவிட்டனர். சொந்த ஊர் உள்ளவர்கள் எல்லாம் வேலைகளுக்கு விடுமுறை கேட்டுத் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். அப்படித்தான் ஜீவாவுடைய அப்பாவும் ஜீவாவையும் தன் ஊருக்கு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால், போக வழி தெரியாத அருள் மற்றும் ராமு பேருந்து நிலையத்திலேயே தங்கிவிட்டனர்.

 

மேலும் வானிலை ஆய்வு மையம் குறித்த தேதியும் வந்ததால் பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரர்களும் கடைகளைப் பூட்டிவிட்டுக் கிளம்பிவிட்டனர். போக்குவரத்தும் அந்நகரில் நிறுத்தப்பட்டுவிட்டன. பேருந்துகள் அனைத்தும் வரிசையாகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றன. அருளும் தனக்கும் ராமுவுக்கும் சாப்பிட ஓரிரு பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துவிட்டான். மழை மெதுவாக வானிலிருந்து பெய்ய ஆரம்பித்தது. ஏற்கனவே வாங்கி வைத்த உணவுப்பொருட்களை அவன் உண்டுவிட்டு மீதம் இருப்பதை ராமுவுக்கும் அளித்தான். ஊருக்குச் சென்ற ஜீவாவோ காலை மற்றும் மாலை வேளையில் தேநீர் அருந்தும் போதெல்லாம் ராமுவைப் பற்றிய எண்ணம்தான். இப்போது ராமு எங்கிருக்கும்? சாப்பிட்டிருக்குமா? அதற்கு யார் உணவளித்தது? என்ற கேள்விகள் ஜீவாவின் மனதைப் போட்டுத் துளைத்தன. ஆனால் இங்கு மழை விடாது பெய்துகொண்டே இருந்ததால் சாரல், குளிர் அதிகமாக இருந்தது. அது அருளையும் ராமுவையும் தூங்கவிடாமல் துன்புறுத்தியது. எனவே அருள் ராமுவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு பேருந்தினுள் ஏறிவிட்டான். இரவு உறங்கிய பின் மெதுவாகக் கண் விழித்து எழுந்து பார்த்தான் அருள். வெளியே பார்க்கும்பொழுது மழை இன்னும் பெய்துகொண்டேதான் இருந்தது. சற்றுத் தூறலாகப் பெய்துகொண்டிருப்பதைக் கவனித்த அருள் கீழே இறங்கிச் சாப்பிடுவதற்குத் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணம் கொண்டு, தனது ஊன்றுகோலைக் கையில் எடுத்தபடி இறங்க முற்பட்டான். ஆனால் அவனுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. மழைநீரின் வெள்ளத்தில் அவன் வைத்திருந்த இடத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்துக்கொண்டு செல்லப்பட்டுவிட்டன என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். கீழே இறங்கும்பொழுது அவனுடைய முழங்கால் எட்ட மழை வெள்ளம் இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் வடிகால் இருந்தது என்றும் அது முழங்காலுக்கு மேல் தண்ணீர் வந்தால் அது வடிந்து வெளியே சென்றுவிடும் என்பதும் நன்றாகவே அருளுக்குத் தெரியும். எனவேதான் உணவுப் பொட்டலங்களை அவன் அங்கேயே வைத்துவிட்டுச் சென்றான். தற்போது நடந்திருப்பதைக் காணும்பொழுது அவனது கண்கள் கலங்கின. மேலும் இதனை அவன் எதிர்பார்க்கவில்லை. உணவுகள் எல்லாம் அடித்துக்கொண்டு சென்றுவிட்டனவே. நான் என்ன செய்யப் போகிறேன்? நான் எப்படி உண்ணுவது? ராமுவுக்கு எப்படி உணவளிப்பது? என்று எண்ணியவாறே பேருந்திற்குள் மீண்டும் நுழைந்தான் அருள்.

 

பேருந்தில் ஏறி சிறிது நேரம் கழித்து, தனது சட்டைப்பையிலும் பேண்டிலும் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான் அருள். அப்பொழுது பேண்ட்பையில் ஏதோ ஒன்று அவனின் கைகளுக்கு அகப்பட்டது. என்னவென்று உடனே எடுக்கும்போது அது ஒரு சிகரெட் பாக்கெட். அவர் ஏற்கனவே பயன்படுத்தி வைத்திருந்த சிகரெட் பாக்கெட் அது. அதில் தற்பொழுது மூன்று சிகரெட்டுகள் மற்றும் ஒரு தீப்பெட்டியும் இருந்தன. அப்பொழுதுதான் அவருக்கு 'நான்தான் இதனை வைத்திருந்தேன்' என்று நினைவுக்கு வந்தது. நல்ல வேளை, இவை மழையில் நனைந்துவிடவில்லை. நனைந்திருந்தால் தீப்பெட்டியிருந்தும் தேவைப்பட்டிருக்காது என்று நினைத்து ஒரு வேளைக்கு ஒரு சிகரெட் துண்டு என மூன்று வேளைக்கு மூன்று சிகரெட் துண்டுகளை வைத்துக் கொள்ளலாம். மழை வந்துகொண்டேதான் இருக்கிறது. நாளைக்கு மழை நின்றுவிட்டால் கடைகள் திறக்கப்பட்டுவிடும். அப்பொழுதும் ராமுவுக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு நாமும் உண்டு கொள்ளலாம்' என நினைத்தார் அருள். ராமு பசிக்கும்போதெல்லாம் கீழே ஓடும் மழை தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டிருந்தது.

 

Post a Comment

0 Comments

Close Menu